போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு
9/26/2020 6:12:26 PM
மும்பை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மும்பை அலுவலகத்தில் ஆஜரானார். அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட சிலரை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் போதைப் பொருளுக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதையடுத்து கோவாவில் ஷூட்டிங்கில் இருந்த தீபிகா படுகோன் தன் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங்குடன் தனி விமானத்தில் நேற்று முன்தினம் இரவு மும்பைக்கு வந்தார்.
இன்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு முன் ஆஜராக இருந்ததால், தன் மனைவி தீபிகாவுடன் தானும் உடன் வர அனுதிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கிடையே, போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மினே அவர் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபலங்களின் மேனேஜரான ஜெயா சாஹா தான் அந்த குரூப்பின் ஓனராக இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தீபிகா மட்டும் அல்லாமல் மற்ற நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகவிருக்கிறார்கள்.
இதற்கிடையே ரகுல் ப்ரீத் சிங் நேற்று என்சிபி அதிகாரிகள் முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்நிலையில், இன்று காலை மும்பையில் கொலாபா அப்பல்லோ துறைமுகத்தில் உள்ள ஈவ்லின் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்த அதிகாரிகள் தீபிகா படுகோனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் உடன் வர அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் தீபிகா மட்டும் விசாரணைக்கு தனியாக ஆஜரானார். அவருடன் கணவர் ரன்வீர் சிங் காரில் வரவில்லை.