பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட்
9/20/2020 5:12:49 PM
மும்பை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது நடிகை பயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை பயல் கோஷ், திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை பயல் கோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அனுராக் காஷ்யப் என்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தி மிகவும் மோசமாக நடத்தினார். அனுராக் காஷ்யப் மீது பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனுராக் காஷ்யப்புக்கு பின்னால் உள்ள அவரது கோர முகத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். நான் தற்போது கூறியுள்ள புகாரால் எனக்கு தீங்கு ஏற்படலாம். எனது பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பயல் கோஷ் வெளியிட்ட இந்த டுவீட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில், அவரது ரசிகர்கள் வேகமாக பதிலளித்து வருகின்றனர். அதில், அனுராக் காஷ்யப்யை கைது செய்ய வேண்டும் என்று ஹேஷ்டேக் உருவாக்கி டிரண்டிங் செய்து வருகின்றனர். மேலும், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், இது குறித்து தனது எதிர்வினை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு குரலும் முக்கியமானது. அனுராக் காஷ்யப்பை கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உங்கள் (பயல் கோஷ்) புகாரை நீங்கள் எனக்கு அனுப்பலாம். இந்த விஷயத்தை தேசிய பெண்கள் ஆணையம் ஆராயும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து டுவிட் செய்த பயல் கோஷ், ‘நன்றி, நான் விரைவில் வருவேன்’ என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் மீது நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரும் தனது பங்கிற்கு மறுப்பு டுவிட்டுகளை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து என்னை மவுனமாக்கும் முயற்சியாக இருக்கும். என்னை மவுனமாக்கும் போது, மற்ற பெண்களும் கூட இதில் சேர்வார்கள். கொஞ்சம் அடக்கமாக இருங்கள் மேடம். உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நான் தவறாக நடந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நடிகை பயல் கோஷ், இந்தி, பஞ்சாபி, ெதலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, 2016ம் ஆண்டில் சாத் நிபனா சாதியா என்ற தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.