கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு
9/20/2020 5:12:23 PM
புதுடெல்லி: கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதில், அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில் கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கும் கிட்டதிட்ட தளர்த்தப்பட்டும் வருகின்ணன. ஆனால் இதுவரை கொரோனா பரவலின் தீவிரம் குறையவில்லை. கொரோனா வைரஸ் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியும், பலி எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியும் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு தளர்வு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக அடுத்த வாரம் ஏழு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘வரும் 23ம் தேதி டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பிற மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு முன்னேற்றம், பொருளாதார பாதிப்பு குறித்து மறுஆய்வு நடத்தப்படும். குறிப்பாக கொரோனா தொற்று தீவிரமாக உள்ள மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதனால், குறிப்பிட்ட அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின. முன்னதாக, கொரோனா நிலையை மறுஆய்வு செய்வதற்காக கடந்த ஆக. 11ம் தேதி ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.