மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்: திமுக, காங். உள்ளிட்ட கட்சிகள் காரசார பேச்சு
9/20/2020 5:10:53 PM
புதுடெல்லி: பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று 2 வேளாண் மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் தாக்கல் செய்தார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்து காரசாரமாக பேசின.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாஜ கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் இன்று 2 வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த மசோதாக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (எம்.எஸ்.பி) எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியளிக்கிறேன். எம்எஸ்பி முறை தொடரும். வேளாண் மசோதாக்கள் குறித்த தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டு மசோதாக்களும் வரலாற்று சிறப்புமிக்கவை. விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும்’ என்றார்.
இருந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிபிஐ (எம்) உறுப்பினர் கே.கே.ரகேஷ், திரிணாமுல் எம்பி டெரெக் ஓ பிரையன் மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர், மேற்கண்ட இரு மசோதாக்களையும் கடுமையாக எதிர்த்ததுடன் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது பாஜக எம்பி பூபேந்தர் யாதவ் பேசுகையில், ‘பொய்களின் அடிப்படையில் விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்த முயற்சிக்கக்கூடாது. தொழில்நுட்ப உதவியுடன் இந்திய விவசாயிகளுக்கு மரியாதைக்குரிய அந்தஸ்தை இந்த மசோதாக்கள் கொடுக்கின்றன’ என்றார். திரிணாமுல், திமுக, அதிமுக, டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் பேசுகையில், ‘வேளாண் மசோதா விவசாயிகளுக்கு பலன் அளிக்காது. விவசாயிகள் அடிமையாக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக விவசாயிகள் மாற்றப்படுவர். வேளாண் மசோதாவை அவசர அவசரமாக மத்திய அரசு நிறைவேற்றுவது ஏன்? மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
நம் நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். இந்த மசோதாவால் அந்த விவசாயிகள் பயனடையமாட்டார்கள்’ என்று காரசாரமாக பேசினார். காங்கிரஸ் எம்பி பார்தாப் சிங் பஜ்வா பேசுகையில், ‘வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயி மீதான மரண சாசனம். பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலத்தை அபகரிக்க, இந்த மசோதாக்கள் வழிவகுக்கும்’ என்றார். தொடர்ந்து, அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘ஒப்பந்தம் அளவிலான விவசாயம் உலகளவில் தோல்வியடைந்த முறை. இந்த மசோதாவால் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது’ என்றார். தொடர்ந்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.