பைக் திருடர்கள் மூவர் கைது: 2 பைக் பறிமுதல்
9/9/2025 5:23:39 PM
தண்டையார்பேட்டை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் 1வது தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (28). இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்றுகாலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார். அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் பாஷா (35) என்பவரின் பைக்கும் காணாமல்போனது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று போலீசார் ரோந்து சென்றபோது கண்ணன் ரவுண்டானா பகுதியில் சுற்றித்திரிந்த தமிமுன் அன்சாரி(37), அமீனுல்லா (40) மற்றும் அன்புச்செழியன்(56) ஆகியோரை கைது செய்து விசாரித்த போது பைக் திருடர்கள் என்பதும் மேற்கண்ட 2 இடத்திலும் இவர்கள்தான் கைவரிசை காட்டியுள்ளனர் என்றும் தெரிந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இதில் தமிமுன் அன்சாரி மீது பழைய வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, கிண்டி ஆகிய காவல்நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களிடம் இருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.