அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் மேலும் 2பேர் கைது
9/9/2025 5:22:08 PM
ஆலந்தூர்: மூவரசன்பட்டில் அதிமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மூவரசன்பட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம்(46). அதிமுக பிரமுகரான இவர், மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவராக பணியாற்றியுள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். ஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணபாண்டி(49)க்கும் அதிமுக பிரமுகருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. கடந்த 2ம் தேதி மூவரசன்பட்டு சுப்பிரமணியன்நகர் 2வது தெருவில் வந்தபோது காரில் வந்த 4 பேர் சரமாரி தாக்கியதில் பக்தவச்சலம் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கிருஷ்ணபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில், இதுசம்பந்தமாக கிருஷ்ணபாண்டியின் உறவினர்கள் நெல்லையை சேர்ந்த ஆனந்தராஜ் (30), ஜெயசீலன்(23) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நில விற்பனை பிரச்னையில் அதிமுக பிரமுகர் பக்தவச்சலத்தை தாக்கியதாக தெரியவந்துள்ளது.