தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?
8/12/2025 2:21:12 PM
சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறி வந்த நிலையில் தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து உலக பொருளதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து தங்கத்தில் மீது முதலீடு செய்ய ெதாடங்கினர். இதனால், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தினசரி ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த 7ம் தேதி ஒரு சவரன் (8 கிராம்) ரூ.43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் உச்சப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. தங்கம் விலை மேலும் உயரும் என்று கூறப்பட்டது.
விரைவில் சவரன் ரூ.50,000ஐ கடக்கும் என்று நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இதனால் பொதுமக்களும் நகை வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சிறிதளவு குறைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.31 குறைந்து ஒரு கிராம் ரூ.5,385க்கும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு சவரன் ரூ.43,080க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும் (திங்கள்) தங்கம் விலை மேலும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,365க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.42,920க்கும் விற்கப்பட்டது. 3வது நாளாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவியது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ஒரு கிராம் ரூ.5,242க்கும், சவரனுக்கு ரூ.984 குறைந்து ஒரு சவரன் ரூ.41,936க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ.984 அளவுக்கு குறைந்தது. இது தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,832 குறைந்து ஒரு சவரன் ரூ.40,104க்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.5,013க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்ததால் இன்று காலை நகை வாங்க அதிகளவில் மக்கள் கடைகளில் குவிந்தனர். தங்கம் விலை மேலும் சில நாட்களுக்கு குறையும் என்றும், அதன்பிறகு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால்தான் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்தால்தான் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது. தற்போது, உலகத்தில் முதன் முதலாக ரஷியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி நேற்று அறிமுகப்படுப்பட்டுள்ளது. இதுவும் தங்கத்தின் விலை குறைவுக்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.