10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்
8/10/2025 2:50:28 PM
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசு அறிவித்தபடி தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காலாண்டு தேர்வில் 30 சதவீதம், அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 70 சதவீதம் கணக்கீடு செய்து, அதன் அடிப்படையாக கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது.
இதையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான மதிப்பெண்கள் வழங்க அந்தந்த பள்ளிகளில் இருந்து காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் கடந்த மாதம் பெறப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. ஆனால், காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தோல்வி என்று அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல்களில் ஆப்சென்ட் என்று பதிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 12690 பள்ளிகளில் மேனிலைப் பள்ளிகள் 7368, உயர்நிலைப் பள்ளிகள் 5322. இவற்றில் பத்தாம் வகுப்பு படித்த 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவியர் 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர். மொத்த தேர்ச்சி 100 சதவீதம். இவர்கள் தவிர 6235 மாற்றுத் திறனாளிகளும் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தையும் வேலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை மாவட்டம் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மொத்த தேர்ச்சி பெற்றோரில் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியோர் 52741 பேர். அவர்களில் 26701 மாணவர்கள், 26040 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவதாக வேலூர் மாவட்டம் வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியோர் 50916 பேர். இவர்களில் மாணவர்கள் 25691 பேர். மாணவியர் 25225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியோர் 49235 பேர். அவர்களில் மாணவர்கள் 23938 பேர், மாணவியர் 25297 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.