2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்
8/7/2025 2:30:00 PM
சென்னை: கலைஞரின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவிகளை வழங்கினார். கலைஞரின் இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலாநிதி வீராசாமி எம்பி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கலைஞர் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்த பதாகைகளை கையிலேந்தி கோஷமிட்டனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் “கொரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலும் கலைஞரின் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டது.
இதே போல் தமிழகம் முழுவதும் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நல உதவிகளை திமுகவினர் வழங்கினர். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் அவரின் சிலையை காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அன்பில் மாவட்டச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகள் அணி தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன், டிஆர்பி ராஜா, முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் கலைஞர் 2வது நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் டிஆர்ஆர்.செங்குட்டுவன், கழக குமார், ஜீவன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.