வதந்திகளை நம்பாதீர்கள் சசிகலா வெளியே வரமாட்டார்: அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்
7/16/2020 2:31:59 PM
தஞ்சை: சசிகலா வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் காமராஜ் கூறினார். தஞ்சை அருகே மடிகை, மூர்த்தியாம்பாள்புரம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: விவசாயிகளின் தேவைக்கேற்ப நகைக்கடன்கள் வழங்க தமிழக முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். சில வங்கிகளில் அதற்கான ஒதுக்கீடு முடிந்திருக்கும். மற்றப்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சசிகலா சிறையிலிருந்து விரைவில் வெளியே வந்தால் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர், ‘‘இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். எனவே கட்சியையும், ஆட்சியையும் செம்மையாக கொண்டு செல்கிறார்கள். இதில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் 2வது கருத்தே கிடையாது. கீழிலிருந்து மேல் வரை நாங்கள் செம்மையாக சென்று கொண்டிருக்கிறோம். 2வது கருத்துக்கு இடமே கிடையாது. சசிகலா வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆட்சி மாற்றம் ஏற்படும் என எத்தனையோ பேர் எதிர்பார்த்தனர். ஆனால் யாராலும் இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.