சாத்தான்குளத்தை அடுத்து தென்காசியிலும் கொடூரம்; போலீஸ் தாக்குதலில் ஆட்டோ டிரைவர் சாவு: பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்
6/28/2020 2:34:00 PM
தென்காசி: ஆட்டோ டிரைவர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி அருகே பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் 2 வியாபாரிகள் இறந்த நிலையில் அடுத்ததாக தென்காசியில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்ைட அருகே உள்ள வீ.கே.புதூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி விநாயகம். இவர்களது மகன் குமரேசன் (25). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக கடந்த மே 8ம்தேதி குமரேசன் தனது தந்தையுடன் வீகேபுதூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவர்களை விசாரித்த எஸ்ஐ சந்திரசேகர், குமரேசனை கன்னத்தில் தாக்கினார். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மறுநாள் வீகேபுதூர் ஆட்டோ ஸ்டாண்டில் குமரேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எஸ்ஐ, அவரிடம் நாளை (10ம்தேதி) காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறியதோடு, அவரின் செல்போனையும் பறித்துச் சென்றார். அதன்படி மறுநாள் (10ம்தேதி) காவல்நிலையம் சென்ற குமரேசனை எஸ்ஐ சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் லத்தியால் சரமாரியாக தாக்கியதோடு, பூட்ஸ் காலாலும் மிதித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரிடம் ‘இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னையும், உனது தந்தையையும் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவேன்’ என்று கூறி மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது. எஸ்ஐ மற்றும் காவலர் தாக்கியதில் காயமடைந்த குமரேசன், சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த ஜூன் 13ம்தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் இறந்தார். தகவல் அறிந்து குமரேசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வீகேபுதூர் காவல் நிலையம் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார்அபிநபு, தென்காசி எஸ்பி சுகுணாசிங், டிஎஸ்பிக்கள் தென்காசி கோபாலகிருஷ்ணன், ஆலங்குளம் ஜாகீர்உசேன், சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரிசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆட்டோ டிரைவர் குமரேசன் சாவுக்கு காரணமான எஸ்ஐ சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்குபதிந்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
நேற்றிரவு தொடங்கிய இந்த போராட்டம் இன்று அதிகாலை வரை நீடித்தது. அவர்களிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், எஸ்ஐ மற்றும் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
விடிய, விடிய நடந்த இந்த போராட்டத்தால் வீகேபுதூர் பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இன்று காலை அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் குமரேசன் உடல், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே குமரேசனின் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் கூறி வருவதால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கி 2 வியாபாரிகள் இறந்த நிலையில், தென்காசியில் போலீசார் தாக்கி ஆட்டோ டிரைவர் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவு வாங்கும் காவல்நிலையங்கள்
சாத்தான்குளத்தில் போலீசார் நடத்திய கொடூரத் தாக்குதலில் தந்தை, மகனான வியாபாரிகள் இருவர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட தாக்கம் சாலை மறியல், தொடர் போராட்டம் என மாநிலம் தழுவிய கொந்தளிப்பை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் இருவர் உள்ளிட்ட காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். இதன் சுவடு மறைவதற்குள் சாத்தான்குளம் அடுத்த பேய்க்குளத்தில் மே மாதம் 24ம் தேதி அதே சாத்தான்குளம் போலீசார் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த மகேந்திரன் (27) என்பவர், ஜூன் 13ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவமும் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போல் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் கடந்த 4 நாட்களுக்கு போலீசார் கடுமையாக நடத்திய தாக்குதலில் படும் காயமடைந்ததோடு விரக்திக்கு ஆளான கணேசமூர்த்தி (29) என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவமும் நெல்லை, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் வீ.கே.புதூர் போலீசார் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பலியானது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளித்தும் அலட்சியம்
இறந்த ஆட்டோ டிரைவர் குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் இதுகுறித்து கடந்த 9 நாட்களுக்கு முன்னரே எஸ்ஐ மற்றும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி எஸ்பியிடம் புகார் அளித்தும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும், குமரேசன் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த அவரது தந்தை நவநீதகிருஷ்ணனிடம், ‘‘உனது மகன் உடல்நலக்குறைவால் தான் இறந்தார்’’ என்று கூறி கையெழுத்து போடச் சொல்லி போலீசார் வற்புறுத்தி உள்ளனர்.