மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
6/8/2025 2:22:18 PM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளியை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முருகன் சிகிச்சையில் இருந்த 101 வார்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளுடன் புகுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனிடையே அந்த கும்பல், அங்கு படுக்கையில் இருந்த முருகனை சரமாரி கத்தியால் குத்தியது. தலை, கழுத்து மற்றும் மார்பில் படுகாயம் அடைந்த முருகன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துவிட்டார் என்று உறுதி செய்தபிறகே கொலையாளிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது; கரும்பாலை பகுதியை சேர்ந்த பட்டா ராஜசேகர் என்பவரை, கடந்தாண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த சந்துரு, முருகன் உட்பட 8 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இதில் கைதான 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தனர். இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, தற்போது முருகன், கூலிப்படையினர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை 2 தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளியை வெட்டி கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.