சென்னையில் 34 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்தது: மதிப்பு கூட்டு வரியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி
6/7/2025 2:41:28 PM
சென்னை: சென்னையில் கடந்த 34 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் தற்போது திடீரென விலை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறையில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது.
கடந்த மார்ச் 25 முதல் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துகள் முடங்கின. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கவில்லை.
தற்போது பொது முடக்கம் அமலில் இருந்தாலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் ஓடுகின்றன. இந்நிலையில் சென்னையில் 34 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 53 பைசாவும், டீசல் விலை 52 பைசாவும் உயர்ந்துள்ளது. இந்த விலையுயர்வை அடுத்து பெட்ரோல் லிட்டர் ரூ.75.54-க்கும், டீசல் லிட்டர் ரூ.68.22 க்கும் விற்பனையாகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்ட நிலையில் தற்போது இந்த விலை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்திவிட்டதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
சென்னையில் கடந்த 34 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்பட்ட நிலையில் இன்று திடீரென ஏற்றம் கண்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் வரி வருவாயை பெருக்குவதற்காக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தி அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.26 ரூபாயும், டீசல் விலை 2.51 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு மே 4 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சென்னையில் (ஜூன் 7) கிட்டத்தட்ட 34 நாட்களுக்குப்பின் விலை உயர்ந்து, பெட்ரோல் லிட்டருக்கு 75.54 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 68.22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.