திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு
6/5/2025 2:50:21 PM
ஆவடி: திருமுல்லைவாயலில் இன்று காலை ஒரு மீன் வியாபாரியை ஓட ஓட விரட்டி, அவரது 2 நண்பர்களும் சரமாரியாக வெட்டி கொன்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வருகின்றனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி நகரை சேர்ந்தவர் பாண்டியன் (31). மீன் வியாபாரி. இவருக்கு மனைவி உஷா (25) மற்றும் மகன் உள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் பாண்டியன் வீட்டுக்கு 2 நண்பர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் பாண்டியனை அழைத்து கொண்டு வீட்டிலிருந்து நடந்து சென்றுள்ளனர். அதே பகுதியில் 2-வது குறுக்கு தெருவில் சென்றபோது பாண்டியனிடம் 2 நண்பர்களும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாண்டியனுக்கும் நண்பர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர் பாண்டியனை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து பாண்டியன் தப்பி ஓடினார். அவரை ஓட ஓட விரட்டி 2 நண்பர்களும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பாண்டியனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து 2 நண்பர்களும் அரிவாளுடன் தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகராறு காரணமாக வீட்டில் இருந்த பாண்டியனை வெளியே அழைத்து சென்று அவர்கள் இருவரும் வெட்டி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதைத் தொடர்ந்து 2 தனிப்படை அமைத்து, தலைமறைவான 2 நண்பர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.