சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: 2 மாவோயிஸ்ட் அதிரடி கைது
6/1/2025 4:02:04 PM
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக 2 மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்ட எல்லையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதத் தொழிற்சாலை நடத்தி வருவதாக நக்சல் தடுப்பு பிரிவுக்கு உளவு தகவல்கள் கிடைத்தன. சுக்மாவின் கதிராஸ் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட் ஆதாரவாளர் மத்வி ஜோகா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று நக்சல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை போலீசார் ஆயுத தொழிற்சாலை பகுதியை சுற்றி வளைத்து ஆலையை அழித்தனர். இதுகுறித்து சுக்மா காவல் கண்காணிப்பாளர் ஷலப் சின்ஹா கூறுகையில், ‘ராசவயா கிராமத்திற்கு அருகே மாவோயிஸ்ட் அமைப்பினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் குழு ஒன்று மத்வி ஜோகா என்பவரை கைது செய்தது. ஜோகாவிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 7-8 ஆண்டுகளாக சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.
சுக்மாவில் மாவோயிஸ்டுகளுக்கு துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆலை ஒன்று செயல்படுவதாகவும், அங்கு அவர் பணியாற்றியதாகவும் தெரிவித்தார். மாவோயிஸ்டுகளுக்கான துப்பாக்கிகளை தயாரிப்பு பஸ்ரிகுடா கிராமத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர், மல்கன்கிரி போலீசாருடன் ஒருங்கிணைந்து அங்கு சோதனை நடத்தப்பட்டு, அங்கு பதுங்கியிருந்த பர்னாய் (45) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ஆயுதங்களை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுடன் துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த ஆலையும் அழிக்கப்பட்டது, கடந்த ஒரு வருடத்தில் சுக்மாவில் மாவோயிஸ்டுகளுக்கு கைது செய்யப்பட்ட பர்னாய் மூலம் 35 துப்பாக்கிகளை தயாரித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது’ என்றார்.