மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜூன் 14ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கொரோனா ஊரடங்குக்கு பின் நடக்கிறது
6/1/2025 3:59:00 PM
புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு அமலுக்கு பின் முதன் முதலாக வருகிற 14ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் மத்திய, மாநில அரசுகளுக்கு வெகுவாக குறைந்துவிட்டன. மத்திய மாநில அரசுகளால் சிறப்பு நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டாலும்கூட, பொருளாதார வீழ்ச்சியால் நாட்டின் தொழில்துறை முற்றிலும் முடங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பிரச்னை ஏற்பட்ட பிறகு முதன்முதலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா நோய்த்தொற்று நாட்டின் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும், அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. தற்போது நடக்கவுள்ள கூட்டத்தின்போது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிகிறது.
அதே நேரத்தில் பேரிடர் கால கூடுதல் வரி (செஸ்) விதிப்பது குறித்து கூட்டத்தில் விவாதம் மட்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே, உற்பத்தி, பொருள்களுக்கான தேவை குறைந்துவிட்ட நேரத்தில் கூடுதல் வரி விதிப்பதால் பொருள்களின் விலை அதிகரித்து, தேவையை மேலும் குறைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, கூடுதல் வரி தொடர்கபாக உடனடியாக முடிவு எடுத்து அமல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை. அத்தியாவசியம் அல்லாத பொருள்கள் மீதான வரியை அதிகரித்தால், அவைகளுக்கான தேவை மேலும் குறையும் அபாயமும் உள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.