பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 68 நாட்களில் 94 உத்தரவுகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
6/1/2025 3:56:51 PM
புதுடெல்லி: பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 68 நாளில் 94 உத்தரவுகள், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முதன்முறையாக பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் முதன்முறையாக நாட்டில் பேரழிவு மேலாண்மைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மாநில அரசுகள் பேரிடர்களை வெற்றிகரமாக சந்தித்து இருந்தாலும், இச்சட்டத்தை மத்திய அரசுதான் அமலாக்கும் அதிகாரம் கொண்டது. மேலும், உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், மாவட்ட அதிகாரிகளுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல் நெறிமுறைகளை வடிவமைத்து அறிவிப்பாக வெளியிடும். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் 24 முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கி மற்றொரு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதிக தொற்று பாதித்த இடங்களுக்கு ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து நடவடிக்கைகளை கடுமையாக செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்திய கடந்த 68 நாட்களில், மத்திய உள்துறை அமைச்சகம் சராசரியாக ஒரு நாளைக்கு 1.3 உத்தரவுகளை பிறப்பித்தது. நேற்றைய நிலவரப்படி, ஊரடங்கு தொடர்பாக மாநிலங்களுக்கு இதுவரை 94 உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், கூடுதல் கடிதங்கள் ஆகியன மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன.