குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம்
2/28/2020 2:27:58 PM
வேலூர்: குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக பணியாற்றி வந்தவர் எஸ்.காத்தவராயன்(60). இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நடந்த குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1 லட்சத்து 61 ஆயிரத்து 37 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து தொகுதி பணியாற்றி வந்த இவர் சளி, இருமல், நீரிழிவு நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். மேலும் காத்தவராயன் கடந்த சில மாதங்களாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், கடந்த 4ம்தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த காத்தவராயனின் உடல்நிலை நேற்று இரவு மேலும் கவலைக்கிடமானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதுபற்றி தகவலறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறந்த காத்தவராயனுக்கு திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் பெயர் சிவலிங்கம்-பொன்னம்மாள். பெரியதம்பி, சின்னதம்பி என்ற 2 அண்ணன்கள், ஜெய்சங்கர் என்ற தம்பி, சகோதரி செல்வி என 4 பேர் உடன் பிறந்தவர்கள். எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த காத்தவராயன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
திராவிட இயக்க கொள்கைகளின் மீதான பற்று காரணமாக கடந்த 1980ம் ஆண்டு திமுக அடிப்படை உறுப்பினராக ஆனார். 1984ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர இளைஞரணி அமைப்பாளராகவும், 1987ம் ஆண்டு பேரணாம்பட்டு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 1996ல் மாவட்ட பிரதிநிதியாகவும், 2013ல் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
இதற்கிடையில் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக பொறுப்பேற்றார். 2016ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த அவர், இடையில் சட்டமன்ற தேர்தல் காலங்களில் போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். தொடர்ந்து 8 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்த அவருக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் குடியாத்தம் தனித்தொகுதியில் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கேற்ப 27 ஆயிரத்து 841 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை பின்னுக்குதள்ளி வெற்றிபெற்றார்.
அதேபோல் திமுக அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து கலந்து கொண்டவர். கடந்த 1986ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல போராட்டங்களுக்கு பின்னர் குடியாத்தம் இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று 9 மாத காலமே எம்எல்ஏவாக பதவி வகித்தார். சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி நேற்று மரணமடைந்த நிலையில் மற்றொரு திமுக எம்எல்ஏவான காத்தவராயன் இன்று மரணமடைந்துள்ளார்.