ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?
2/27/2020 3:48:51 PM
திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைக்க குழி தோண்டியபோது 504 தங்க காசுகள் கிடைத்தது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ளது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். பல நூறுஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயில் நீர் ஸ்தலம் என்ற சிறப்பு பெற்றது. இந்த கோயிலில் நந்தவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று மதியம் அதற்கான பணி துவங்கியது. பிரசித்தி பெற்ற அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள கொட்டாராம் 100 கால் மண்டபம் அருகே அமைய உள்ள நந்தவனத்தில் வாழை கன்றுகள், பூச்செடிகள் நடுவதற்காக கோயில் பணியாளர்கள் மதில் சுவர் அருகேநிலத்தை தோண்டினர். 2 அடி ஆழம் தோண்டியபோது மூடியுடன் கூடிய செம்பு பானை ஒன்று தென்பட்டது. அதனை பார்த்த கோயில் பணியாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இது குறித்து கோயில் இணை ஆணையர் மாரியப்பனிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் அங்கு விரைந்து வந்து அந்த செம்பு பானையை திறந்து பார்த்தபோது உள்ளே தங்க காசுகள் இருந்தன. செம்பு பானையில் இருந்த தங்க காசை இணை ஆணையர் மாரியப்பன் கணக்கிட்டார். அதில் 504 தங்க காசுகள் சட்டையில் உள்ள பட்டன் வடிவத்தில் இருந்தன. ஒரே ஒரு தங்க காசு தற்போதைய 10 ரூபாய் நாணயத்தின் வடிவில் இருந்தது. தாசில்தார் தர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு வந்தார். அவரிடம் தங்க காசுகளை இணை ஆணையர் மாரியப்பன் ஒப்படைத்தார். ஒவ்வொரு காசும் 3.3 கிராம் எடை உள்ளது. ஒன்று மட்டும் 10 கிராம் எடை உள்ளது. மொத்தம் 1 கிலோ 715 கிராம் எடை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த தங்க காசுகள் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கருவூலத்தில் வைக்கப்பட்டது.
கோயிலில் கிடைத்த தங்க காசு புதையல் மன்னர்காலத்தை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இந்த கோயிலில் தங்க புதையல்கள் இருப்பதாக பக்தர்கள் ஏற்கனவே கூறி வந்த நிலையில் இப்போது தங்க புதையல் கிடைத்துள்ளது. எனவே கோயிலில் மேலும் தங்க புதையல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இன்றும் அந்த பகுதியில் தோண்ட முடிவு செய்துள்ளனர். இந்த தங்க காசுகள் எந்த மன்னருடைய ஆட்சி காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் வருகிறார்கள். ஒவ்வொரு காயினும் 3.3 கிராம் எடை இருந்தது. ஒன்று மட்டும் 10 கிராம் எடையுடன் இருந்தது. செம்பு பெட்டகமா அல்லது வேறு ஏதும் வகையை சேர்ந்ததா என்பது ஆய்வுக்கு பிறகே தெரிய வரும். சட்ட நடவடிக்கைகள் முடிந்து, தங்க காசுகள் அனைத்தும் சிறிய பெட்டியில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.