காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
2/27/2020 3:47:14 PM
சென்னை: காசோலை மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
‘‘உன் சமையலறை’’ என்ற திரைப்படத்தை தமிழில் நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததையடுத்து, இதனை இந்தியில் இயக்க முடிவு செய்தார். இதனைதொடர்ந்து படம் இந்தியில் முன்னனி நடிகர்களான நானா படேகர், ஸ்ரேயா சரன், அலி பாசல், டாப்சி உள்ளிட்ட நடிகர்களை வைத்து தயாரானது. இந்தநிலையில் திரைப்படத்திற்காக பைனான்சியர் ஒருவரிடம் இருந்து கோடி கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
இதனால் பணம் கொடுப்பது தொடர்பாக பிரகாஷ்ராஜ் மற்றும் பணம் கொடுத்தவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரகாஷ் ராஜ் ரூ.5 கோடிக்கு காசோலை வழங்கியுள்ளார். பைனான்சியர் காசோலையை வங்கியில் செலுத்தியபோது போதிய பணமில்லை என்று காசோலை திரும்பி வந்து விட்டது. இதனால் பைனான்சியர் தரப்பில், பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.