சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்
2/27/2020 3:26:18 PM
சென்னை: சிஏஏ, என்பிஆர் நடைமுறைப்படுத்தக்கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றகோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நேற்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிஏஏ மற்றும் என்பிஆர் சட்டத்தை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாலபிரஜாபதி அடிகளார், காஜா மொய்தீன் பாகவி, பேராயர் தேவசகாயம் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், கிறிஸ்துவ மக்கள் முன்னணி தலைவர் இனிகோ இருதயராஜ், கல்வியாளர் தாவூத் மியாகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்பிஆரின் நீட்சியான என்ஆர்சியை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனும் கொள்கை முடிவையும் எடுக்க வேண்டும்.
சிஏஏவுக்கு எதிராக டில்லி ஷாஹின்பாக் போன்று வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை அவர்களோடு மக்கள் மேடை உறுதுணையாக இருக்கும். டெல்லியில் வன்முறை, அராஜகத்தில் இறங்கியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு சிஏஏ-வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், என்பிஆரை மாநில அரசு அமுல்படுத்தக் கூடாது.
இதையும் மீறி அரசு செயல்படுத்தினால் விவரங்களை தராமல் மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை எதிர்த்து மார்ச் மாதம் 3வது வாரத்தில் 24 மணி நேர தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். காலை 10 மணிக்கு துவங்கும் அந்தப் போராட்டம் மறுநாள் காலை 10 மணிக்கு முடியும். சென்னையில் தலைமை செயலகம் முன்பும், இதர ஊர்களில் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.