கொரோனா வைரஸ் காரணமாக சொகுசுக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டஇந்தியர்கள் 119 பேர் நாடு திரும்பினர்
2/27/2020 3:23:42 PM
புதுடில்லி: கொரோனா வைரஸ் காரணமாக சொகுசு கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 119 இந்தியர்கள் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் நடுக்கடலில் நிறுத்தி வைத்திருந்தது ஜப்பான். இந்த கப்பலில், 138 இந்தியர் உட்பட 3,711 பேர் இருந்தனர். இவர்கள் கப்பலிலேயே சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 22 நாட்கள் சொகுசு கப்பலில் அடைபட்டுக் கிடந்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இவர்கள் இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில் கூறுகையில், ‘’கொரோனா அச்சத்தால் ஜப்பான் சொகுசு கப்பலில் வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினருடன் ‘ஏர் இந்தியா’ விமானம் டெல்லி வந்தது’’ என்று பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும், கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவுக்கு இந்தியா அனுப்பிய மருந்துகளை ஒப்படைத்துவிட்டு, அங்குள்ள இந்தியர்களுடன் இந்த விமானம் இன்று டெல்லிக்கு திரும்புகிறது.