பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு ரஜினியின் காட்டுப்பகுதி சாகசம் மார்ச் 23ம்தேதி ஒளிப்பரப்பு: டிஸ்கவரி சேனல் உறுதி செய்தது
2/27/2020 3:21:58 PM
சென்னை: பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் பங்கேற்ற காட்டு பகுதி சாகச பயண நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி ஒளிப்பரப்பாகிறது. காடு, பாலைவனம், மலைப்பகுதிகளில் தனியாக சிக்கிக்கொண்டால் உயிர் வாழ்வது எப்படி என்பதை மேன் வெர்சஸ் வைல்டு என்ற தலைப்பில் சாகச செயல்களுடன் நிகழ்த்திகாட்டி வருகிறார் பியர் கிரில்ஸ். டிஸ்கவரி சேனலில் இவரது நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார். சென்னையிலிருந்து காலையில் விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த் வனப்பகுதியை அடைந்து பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் சென்றார். இந்த நிகழ்ச்சியின்போது ரஜினி மீது முற்கள் குத்தி சிராய்ப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து மாலையில் அவர் சென்னை திரும்பினார். ஒரே நாளில் ரஜினி காட்டுப் பகுதியிலிருந்து திரும்பினாலும் பியர் கிரில்ஸ் அப்பகுதியில் ஜனவரி 28ம்தேதி மற்றும் 29ம்தேதி ஆகிய 2 நாட்கள் காட்சிகளை படமாக்கினார். பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற காட்டு பயண சாகச நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. அதுபற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ரஜினி, பியர் கிரில்ஸ் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று டிஸ்கவரி சேனல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.