லைக் கொடுத்ததால் வந்த சோதனை பேஸ்புக்கில் மாணவி போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: அரக்கோணம் வாலிபர் கைது
2/27/2020 3:17:38 PM
காளஹஸ்தி: பேஸ்புக் மூலம் பழகிய ஐஐடி மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் விடுத்த அரக்கோணம் வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி அடுத்த ஏர்ப்பேடு மண்டலத்தை சேர்ந்தவர் ஐஐடி மாணவி. இவர் தனது சகோதரியின் பெயரில் பேஸ்புக் பயன்படுத்தி வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சோனிபங்காரம் என்ற பெயரில் மாணவிக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் வந்தது. இதையடுத்து மாணவி, சோனிபங்காரத்துடன் பேஸ்புக்கில் சாட் செய்து வந்தார். அடிக்கடி இவ்வாறு சாட் செய்து நண்பர்களாகினர். இவ்வாறு நட்பாக பழகிய சில நாட்களுக்கு பிறகு மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய சோனிபங்காரம் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து கேட்டபோது அவர், தன்னுடன் தொடர்ந்து சாட் செய்யவில்லை என்றால், இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுபற்றி மாணவி, கடந்தாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ஏர்ப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகசியமாக மர்ம நபரை கண்காணித்து வந்தனர். இதில் தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சிந்தலநிகில் மனோகர் என்பவர்தான், சோனிபங்காரம் என்ற பெயரில் மாணவியை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஏர்ப்பேடு-வெங்கடகிரி சாலையில் சென்ற சிந்தல நிகில் மனோகரை கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.