மத்திய அமைச்சர், பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்: டெல்லி பார் கவுன்சில் கண்டனம்
2/27/2020 3:13:25 PM
புதுடெல்லி: டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் மற்றும் பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு டெல்லி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து புகார் செய்தனர். அதே நேரத்தில் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, ஷாகீன் பாக் பகுதியில் சிஏஏ.வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்திய இரு குழுக்கள் இடையே 3 நாட்களுக்கு முன், மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கியுடன் வந்த வாலிபர், வானத்தை நோக்கி சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர், பஜன்புரா மற்றும் சாந்த் பாக் பகுதிகள் போர்க்களமாயின. லால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் இந்த கலவரத்தில் சிக்கி பலியானார். இந்த போராட்டத்தில் இதுவரை மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர். 48 போலீசார் உட்பட 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 70 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியின் பல பகுதிகளில் அடுத்த மாதம் 24ம் தேதி வரை போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லியில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்த கலவரம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜ மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் மிஸ்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுத்து, அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை போல், மீண்டும் ஒரு வன்முறையை நீதிமன்றத்தால் அனுமதிக்க முடியாது என்று ஆவேசமாக கூறினர்.
மேலும் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் சென்று நிலைமையை ஆராய்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நீதிபதி முரளிதர் தான் சரமாரி கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இது பாஜ வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் கலவரம் நடந்த சீலாம்பூர், சில்விகார் உள்ளிட்ட இங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.வத்சவா கூறுகையில், டெல்லி கலவரம் தொடர்பாக 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார். இந்நிலையில், மத்திய அமைச்சர் மற்றும் பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதிகளில் ஒருவரான முரளிதர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப்- அரியானா மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பாஜ தலைவர்களுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி, இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கடந்த 19ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையின் பேரில் தான் முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. முரளிதர் இடமாற்றத்துக்கு டெல்லி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால், இன்று நடைபெறும் இந்த வழக்கை, நீதிபதி முரளிதர் விசாரிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
வடகிழக்கு டெல்லியில் ஷாப்ரா பாத், மவுஜிபுர்-பாபர்பூர், கோகுல்புரி, ஜோரி என்கிளேவ், விகார் பகுதிகளில் அதிகளவில் வன்முறை நடந்தது. இந்த பகுதிகளில் இன்று போலீசாருடன் துணை ராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் இன்று துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர். அதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இந்த பகுதிகளி–்ல் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனிடையே டெல்லி கலவரம் தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
இந்த கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி உள்ளனர். டெல்லியில் வன்முறை பற்றி எரிவதால், ஜனாதிபதியிடம் இதுகுறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘நானும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் திமுக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் உங்களை சந்தித்து டெல்லி நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த விரும்புகிறோம். இதற்காக நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.