தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் பாஜ கூட்டணியில் முதல் எதிர்ப்பு தீர்மானம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி
2/26/2020 4:35:52 PM
பாட்னா: பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, என்ஆர்சி-யை அம்மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் எனக்கூறி, முதன்முறையாக எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகின்றது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பீகார் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும்நிலையில், நேற்றைய அமர்வில் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப் போவதில்லை என்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில்,‘‘குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம். இச்சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது இல்லையா என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறது. ஆனால், என்ஆர்சி-யைப் பொறுத்தவரை இப்போதுள்ள வடிவத்தில் அதை பீகாரில் நடைமுறைப்படுத்த மாட்டோம். என்பிஆர் 2010ல் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்றே நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி பேசுகையில், “முதல்வர் நிதிஷ் குமார் என்பிஆர் 2010 முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதில் எந்தவிதமான கேள்விக்கும் இடமில்லை’’ என்றார். பீகார் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுவரை தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் இவ்வாறு தீர்மானம் இயற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். வருகிற நவம்பருக்கு முன்னதாக அம்மாநிலத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான அரசு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.