கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் விபரீதம் மட்டன் குழம்பில் சயனைடு கலந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி: 5 பேர் அதிரடி கைது
2/20/2020 3:31:07 PM
திருமலை: கள்ளக்காதல் சந்தேகத்தால் மட்டன் குழம்பில் சயனைடு கலந்து கொடுத்து கணவனை கொல்ல முயன்ற மனைவி, மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் பொலசானிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் குருநாத், பால் வியாபாரி. இவரது மனைவி ராணி, பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கோவிந்த் குருநாத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ராணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனது மகனுடன் சேர்ந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ராணியும், அவரது மகனும், குருநாத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினார்களாம். இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி, சீனிவாஸ் ஆகியோருடன் சேர்ந்து மோஜேஷ் என்பவரிடம் சயனைடு வாங்கியுள்ளனர்.
சயனைடின் வீரியத்தை சோதிக்கும் வகையில் முதலில் கோழிக்கு தீவனத்தில் கலந்து கொடுத்தனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கோழி உயிரிழந்தது. பின்னர் தாங்கள் திட்டமிட்டபடி ராணி கடந்த 17ம்தேதி மட்டன் குழம்பு வைத்துள்ளார். அதில் சயனைடு கலந்து கணவர் கோவிந்த் குருநாத்துக்கு பரிமாறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்த உணவில் வித்தியாசமான வாசம் வந்ததால் சந்தேகமடைந்த கோவிந்த குருநாத், அதை சாப்பிடாமல் மனைவியை தேடி வெளியே சென்றார். அப்போது ராணி, தனது மகனிடம் நடந்த சம்பவத்தை ரகசியமாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கோவிந்த் குருநாத், பீமடோலு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், ராணி மற்றும் அவரது மகன் மற்றும் தனலட்சுமி, சீனிவாஸ், மோஜேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.