காவிரி ஆணையத்தை தவறவிட்ட தமிழக அரசு: பெண்ணையாறு பிரச்னையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் கேட்கிறது...விவசாயிகள் அதிர்ச்சி
2/9/2025 2:23:23 PM
சென்னை: நான்கு மாநில நதிநீர் பிரச்னையை தீர்க்க போராடி உருவாக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையைத்தை தவறவிட்ட தமிழக அரசு தற்போதும் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலத்தின் நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கி அதில் ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு என இரண்டாக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அப்போதைய ஆணையத்தின் தலைவராக மசூத் உசேனும் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்று விட்டார். இதைத்தொடர்ந்து ஒழுங்காற்று குழுவின் கூட்டம் மட்டும் டெல்லி, பெங்களூரு மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில்,”காலியாக இருக்கும் காவிரி ஆணையத்தின் தலைவர் பதவிக்கு அதற்கு தகுதியானவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தெரிவிக்கப்பட்ட நேரம் காலாவதி ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை காவிரி ஆணையத்திற்கு என புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு விட்டதா அல்லது இல்லையா என்ற ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது தமிழகத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதில்,”கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் கிளையான பெண்ணையாற்றின் குறுக்கே அந்த அரசு புதியதாக தடுப்பணை கட்டி வருகிறது. இதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, மனுவையும் கடந்த நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. ஆனால் இதையடுத்து தமிழக அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்றால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் சென்று தான் முறையிட்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து பெண்ணையாறு பிரச்சனையை தீர்ப்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க கேட்டு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கோரிக்கை மனு கொடுத்துள்ளது. இதில் ஒருவேளை அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் கர்நாடகாவிற்கு சாதகமான சூழல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதில் தமிழகம், புதுவை, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடோ அல்லது அணை பிரச்சனையோ எதுவாக இருந்தாலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை தான் அணுக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவது தொடர்பான பிரச்சனையை தீர்க்க புதிய நடுவர் மன்றத்தை தமிழக அரசு கேட்கிறது என்றால், அப்போ கஷ்டப்பட்டு போராடி வாங்கிய காவிரி ஆணையம் என்ன ஆனது?, அதனை தமிழக அரசு தவறவிட்டு விட்டதா? அல்லது ஆணையமே செயல்படவில்லையா?, மேலும் அடுத்து வரவுள்ள கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை தமிழக அரசு எவ்வாறு கையாலும்? என்ற அடுக்கடுக்கான பல்வேறு சந்தேகத்திற்கு இடமான கேள்விகள் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2019ல் கூட்டமே நடக்கவில்லை
இதில் முக்கியமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் அதுசார்ந்த அதிகாரிகள் மாதந்தோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தரும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக நான்கு மாநிலத்தின் ஆணைய உறுப்பினர்களை அழைத்து பேச வேண்டும். மேலும் 3 மாதத்திற்கு ஒருமுறையாவது ஆணையத்தின் கூட்டத்தை நடத்த வேண்டும். இதில் 10 மாத இடைவெளியில் காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி தண்ணீரை மாதத்திற்கு எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதில் கடந்த 2019ம் ஆண்டு முழுவதும் காவிரி ஆணையத்தின் கூட்டம் நடைபெறவில்லை. இதில் கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் தான் ஆணையத்தின் கூட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.