மாணவிகளை விரட்டி விரட்டி தாக்க முயற்சி போதை தலைக்கேறிய போலீஸ்காரர் அட்டகாசம்
2/6/2025 3:41:28 PM
வேடசந்தூர்: போதை தலைக்கேறிய நிலையில் மாணவ, மாணவிகளை விரட்டி விரட்டி தாக்க முயன்ற போலீஸ்காரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணியாற்றுபவர் பாண்டியராஜன். இவர் நேற்று மாலை காமாட்சிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கல்லூரி முடிந்து சென்று கொண்டிருந்த மாணவ, மாணவிகளை விரட்டி, விரட்டி தாக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரணமே இல்லாமல் மாணவ, மாணவிகளை அவர் தாக்க முயன்றதை கண்ட அப்பகுதி மக்கள், ஆத்திரமடைந்து அவரை மடக்கி பிடித்தனர். அப்போதுதான் அவர் அதிகளவில் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தட்டிக் கேட்டனர். ஆனால் அவர் பொதுமக்களையும் தாறுமாறாக திட்டி, தாக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு போலீஸ்காரர், பாண்டியராஜனை பத்திரமாக மீட்டு, தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். மேலும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். காவல் காக்க வேண்டிய போலீஸ்காரரே பணி நேரத்தில், கடும் போதையில் மாணவ, மாணவிகளை தாக்க முயன்றது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.