4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: 74 வயது பெரிசுக்கு 7 ஆண்டு சிறை
2/6/2025 3:40:46 PM
ஈரோடு; ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (74). இவர், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி மாலை கவுந்தப்பாடி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி சைக்கிளில் அவரது வீட்டிற்கு கடத்தி சென்றார். சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி விசாரித்தபோது, சிறுமியை பழனிச்சாமி சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக, அவர் பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, சிறுமிக்கு பழனிச்சாமி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தையை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.