70 தொகுதியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் டெல்லியில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...சிஏஏ போராட்ட பகுதி வாக்குச்சாவடிகளுக்கு ‘அலர்ட்’
2/6/2025 3:32:15 PM
புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. சிஏஏ எதிர்ப்பு போராட்ட பகுதி வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்பி பிரசாரம் செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக செய்தி ெதாடர்பாளருக்கு விதிமீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 70 உறுப்பினர் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு நாளை மறுநாள் (பிப். 8) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இறுதிகெட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (பிப். 6) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். வாக்குப்பதிவு நாளான நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு முன்னதாக எவ்வித கருத்துக் கணிப்பும் நடத்தக் கூடாது என்றும், அதுதொடர்பான முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முழுவதும் 2,689 இடங்களில் 13,750 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த தேர்தலில் 1,47,86,382 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இவர்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 2,32,815 பேர். டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி வட்டார தகவலின்படி, இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கம், ரூ.31,66 கோடி மதிப்புள்ள பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து, டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கூறுகையில், ‘‘70 தொகுதிகள் கொண்ட பேரவை தேர்தலில், ஷாஹீன் பாக் நகரில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் உள்ள ஐந்து இடங்கள் முக்கியமான பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் கவனம் ெசலுத்தப்படும். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். இங்கு, ஐந்து நிலையங்களை உள்ளடக்கிய சுமார் 40 வாக்குசாவடிகள் உள்ளன. இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடியில் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும். அனைத்து நடவடிக்கையும் ‘வெப்காஸ்டிங்’ செய்யப்படும். டெல்லியில் முக்கியமான மற்றும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 516 இடங்களுக்கு உட்பட்ட 3,704 சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய ஆயுத போலீஸ் படையின் (சிஏபிஎப்) 190 கம்பெனி நிறுத்தப்படும். 2019 மக்களவைத் தேர்தலில் பணியமர்த்தப்பட்ட சிஏபிஎப் பணியாளர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக நிறுத்தப்படுவர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக 30 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக நான்கு எப்.ஐ.ஆர், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றார். இதற்கிடையே, சிஏஏ போராட்டக்காரர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க உரை நிகழ்த்தியதாக பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் 96 மணி நேரம் பிரசாரம் செய்த தடை விதித்தது. இந்நிலையில், பிரசாரத்துக்கு இன்றே கடைசி நாள் என்ற நிலையில், தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, எந்தவொரு பொதுக் கூட்டத்திலோ, பொது ஊர்வலத்திலோ பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பங்கேற்கக் கூடாது என்று இன்று அறிவித்துள்ளது.
மற்றொரு நிகழ்வாக, வகுப்புவாத நல்லிணக்கத்துக்கு இடையூறு செய்ததாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க அவருக்கு அவகாசம் அளித்துள்ளது. இவர் சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டில், ‘ஆர்ப்பாட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்களை அடிப்பார்கள். காஷ்மீரி பண்டிதர்களின் வெளியேற்றத்திற்கு காரணமான நபர்கள் இவர்கள்தான். இவர்கள் யார்?’ என்று பதிவிட்டிருந்தார். இந்த சர்ச்சை பதிவு அடிப்படையில் சம்பித் பத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 11ம் தேதி எண்ணப்படுகின்றன.
பிஎஸ்பி வேட்பாளர் மண்டை உடைப்பு
ெடல்லி அடுத்த பதர்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் நாராயண் தத் சர்மா, அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அவரது காரை மறித்து ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். அதில், சர்மாவின் மண்டை உடைந்தது. அவருடன் வந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. சர்மா மீது தாக்குதல் நடந்ததால், அவருக்கும் அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சர்மா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.