ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
2/4/2025 2:32:34 PM
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா ₹10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதனால் தேர்தல் நேரத்தில் விடுதலையாகி அதிமுகவை உடைப்பாரா அல்லது சிறையில் காலத்தை கழிப்பாரா என்ற புதிய பரபரப்பு எழுந்துள்ளது.சொத்து குவித்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரியில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 2014ம் ஆண்டு செப்டம்பரில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியும் அபராதம் விதித்தது. அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படுபவர்கள், சிறை தண்டனையின் முடிவில் தான் அபராத தொகையை கட்டுவார்கள். சசிகலாவை பொறுத்தவரை செக் அல்லது வங்கி டிமான்ட் டிராப்ட் ஆகவே பணத்தை கட்ட வேண்டும். அந்த பணம் எவ்வாறு வந்தது, என்பதற்கு வருமான வரித்துறையிடம் ஆதாரத்தை காட்டி தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறார் என்பது வதந்தி. கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்களுக்கே அந்த விதி பொருந்தும். ஊழல் வழக்கில் அவ்வாறு நன்னடத்தை விதி கடைபிடிக்கப்படாது என்று கூறப்படுகிறது. சசிகலா அபராதம் கட்டும்பட்சத்தில் 2021 ஜனவரி 25ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில், அபராதத்திற்கு பதில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
அவர், 2022ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி விடுவிக்கப்படுவார் என்றும் கர்நாடக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ரொக்கமாக அவ்வளவு பணத்தை கட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. அவர் கட்ட முடியாவிட்டால், உறவினர்கள், நண்பர்கள் பண உதவி செய்யலாம். ஆனால் அவர்களுக்கும் வருமான வரி பிரச்னை ஏற்படும் என்பதால், அவருக்கு பணத்தை கட்ட யாராவது முன் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் அவர் அபராதத்தைக் கட்டுவாரா? அல்லது மேலும் ஓராண்டு தண்டனை அனுபவிப்பாரா என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் விடுதலையானால், மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குவார். அப்போது அதிமுக மீண்டும் உடைவதற்கு வாய்ப்பு உருவாகும். இதனால் மீண்டும் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.