முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது...டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து முக்கிய ஆலோசனை
2/4/2025 2:26:16 PM
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் மற்றும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதுதமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 2020-2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் ரூ.49 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதிக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் முதல்வரின் தனி செயலாளர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவில் இருந்து தமிழகம் வருபவர்களை தீவிரமாக கண்காணிப்பது, சென்னை உள்ளிட்ட முக்கிய நகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைத்து சந்தேகப்படும் நபர்களை அங்கு வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் நுழையாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.அடுத்து, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முதல்வர் லண்டன் சென்றிருந்தபோது அங்குள்ள கிங் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சென்னையில் கிங் மருத்துவமனை கிளை தொடங்குவது குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் சில புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 99 பேர் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதனால், இந்த தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முக்கிய காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம், பொதுமக்களின் நன்மதிப்பை பெற முடியும் என்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் இல்லாமல் தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல், தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.