ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் கேஸ் கசிவு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் ஓட்டம்
2/3/2025 4:46:51 PM
திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பிடு கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றை ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கியது. பின்னர் இந்த எரிவாயு கிணற்றை கொல்கத்தாவை சேர்ந்த பிஎச்எப் நிறுவனம் ஒப்பந்த முறையில் மத்திய அரசிடமிருந்து பெற்று கேஸ் உற்பத்தி செய்து வருகிறது.நேற்று மாலை எரிவாயு கிணற்றில் இருந்து விவசாய நிலம் வழியாக செல்லும் பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் கேஸ் வெளியேறியது. அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கிராமமக்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். கேஸ் கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
12 மணி நேரத்திற்கு மேலாக கேஸ் கசிவு ஏற்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தீயணைப்பு வாகனங்கள் கேஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். ஆனால் இதுவரை நிபுணர்கள் குழுவினர் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எரிவாயு கிணற்றை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள பி.எச்.எப். நிறுவனம் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுபற்றி ஓஎன்ஜிசி நிறுவனம் அதிகாரிகள் கூறுகையில், ‘கேஸ் கசிவு ஏற்படுவதற்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் தொடர்ப்பு இல்லை. இருப்பினும் சமூக அக்கறையுடன் கேஸ் கசிவை சரிசெய்ய தேவையான உதவிகளை எங்களது நிபுணர் குழுவினர் செய்வார்கள்’ என்றார்.
இதனிடையே கேஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் முரளிதர், எஸ்.பி. நயீம் ஆஸ்மி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பிரச்ைன ஏற்படாமல் இருக்க நேற்று முதல் மின்சாரம், செல்போன் டவர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரையும் மீட்டு புனர்வாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டு நடந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.