தந்தை என்கவுன்டர், தாய் அடித்துக் கொலை: தவித்த சிறுமியை தத்தெடுத்த போலீஸ் ஐஜி: உத்தரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி
2/3/2025 4:44:36 PM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தந்தை போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். தாய் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அனாதையாக தவித்த அவர்களது குழந்தையை போலீஸ் ஐஜி தத்ெதடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த 30ம் தேதி 23 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த சுபாஷ் பாதம், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின், 23 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். சுபாஷ் பாதம் மனைவி ரூபியும், கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். நிலைமை இவ்வாறு இருக்க, கொலையான தம்பதியின் ஒரு வயது குழந்தை தற்போது அனாதையாக உள்ளது. இந்நிலையில், அந்த ஒரு வயது பெண் குழந்தையை போலீசார் தத்தெடுக்க உள்ளதாக கான்பூர் ரேஞ்ச் ஐஜி மோஹித் அகர்வால் தெரிவித்தார்.
இதுகுறித்து, ஐஜி மோஹித் அகர்வால் கூறுகையில், ‘‘சிறுமிக்கான கல்வி மற்றும் பிற எல்லா செலவுகளை ஏற்போம். அவள் வளர்ந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைத்து சட்ட முறைகளுக்கும் பிறகு, அந்த சிறுமி தத்தெடுக்கப்படுவார். நாங்கள் அவளை ஒரு நல்ல உறைவிடப் பள்ளிக்கு அனுப்புவோம். நான் அவளை என் சொந்த மேற்பார்வையில் வைத்திருப்பேன்” என்றார். பெற்றோரை இழந்த அந்த சிறுமி தற்போது, பருகாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை, 2 பெண் கான்ஸ்டபிள்கள் பார்த்துக் கொள்கின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட சுபாஷ் மற்றும் ரூபி ஆகியோர் தங்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டனர். அதனால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அந்த சிறுமியை பாதுகாக்க முன்வரவில்லை. தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடும் சாக்கில், சுபாஷ் 23 குழந்தைகளை அழைத்து தனது வீட்டின் அடித்தளத்தில் பிணைக் கைதிகளாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுபாஷ் பாதம் 2002ம் ஆண்டு கொலை வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். மேலும் நான்கு குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருந்தார்.
சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் சிறையில் இருந்த அவர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கொலை வழக்கில் இருந்து தப்பிக்க குழந்தைகளை பணயக்கைதியாக அடைத்து வைத்து நாடகத்தை நடத்தியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, அவரது மகள் போலீசாரின் பாதுகாப்பில் வளர உள்ளதால், உத்தரபிரதேச மக்கள் இச்சம்பவத்தை விநோதமாகவும், நெகிழ்ச்சியடைந்தும் உள்ளனர்.