தைப்பூச தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி ராமேஸ்வரம்கோயிலில் நடையடைப்பு
2/3/2025 4:43:39 PM
ராமேஸ்வரம்: தைப்பூச தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைக்கப்படுகிறது.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிப்.8ம் தேதி தைப்பூச திருநாளை முன்னிட்டு லெட்சுமண தீர்த்தக்குளத்தில் சுவாமி-அம்பாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதனால் அன்று அதிகாலை 3 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். கால பூஜைகள் நடைபெற்ற பின்னர் காலை 10.30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருள உள்ளனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் லெட்சுமண தீர்த்தக்குளத்தில் சுவாமி, அம்பாள் தெப்ப உற்சவம் நடைபெறும்.
இந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிப்.8ம் தேதி காலை 10.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடானதும் ராமநாத சுவாமி கோயில் நடை அடைக்கப்படும். பகல் முழுவதும் நடை அடைக்கப்படுவதால், பகல் நேரத்தில் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடவும், தரிசனம் செய்யவும் அனுமதியில்லை. தெப்ப உற்சவம் முடிந்து பஞ்சமூர்த்திகள் இரவு 10 மணிக்கு மேல் கோயிலை வந்தடைந்ததும் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.