டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்
1/30/2020 4:00:20 PM
ஹாமில்டன்: கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், வெற்றி தேடித் தந்த ரோஹித் ஷர்மா, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டனில் நேற்று நடந்த டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்க விட்டு, இந்திய அணியின் தரமான வெற்றிக்கு ரோஹித் ஷர்மா காரணமானார். மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, முதன் முதலாக நியூசிலாந்தில் டி20 கிரிக்கெட் தொடரையும் வென்றுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிங்ஸ்மெட் நகரில் அந்த அணிக்கு எதிராக தனது சர்வதேச டி20 கணக்கை துவக்கிய ரோஹித் ஷர்மா, இதுவரை 107 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 99 இன்னிங்சுகளில் 124 சிக்சர்களை அடித்துள்ள அவர், அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 2வது இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் (119 சிக்சர்கள்) உள்ளார். 3ம் இடத்தில் மே.இ.தீவுகளின் கிறிஸ் கெய்லும் (105 சிக்சர்கள்), 4ம் இடத்தில் நியூசி. வீரர் கோலின் முன்ரோவும் (103 சிக்சர்கள்) உள்ளனர்.
இந்த பட்டியலில் 76 சிக்சர்களுடன் விராட் கோஹ்லி 12வது இடத்திலும், 74 சிக்சர்களுடன் யுவராஜ் சிங் 13வது இடத்திலும் உள்ளனர்.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த வீரர்களின் பட்டியலிலும் ரோஹித் ஷர்மாவே (4 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 3 சதங்களுடன் 2ம் இடத்தில் நியூசி. வீரர் கோலின் முன்ரோவும், ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல்லும் உள்ளனர்.