‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
12/10/2025 4:34:49 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர். இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் பகலில் சந்திரசேகரர், விநாயகரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் 7ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் உச்சக் கட்ட திருவிழாவான கார்த்திகை தீபதிருவிழா இன்று நடைபெறுகிது.இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோயிலிலும், கோயிலுக்கு வெளியிலும் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் பரணிதீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது. இறுதியில் பக்தர்களின் தரிசனத்துக்காக சொர்ணபைரவர் சன்னதி முன்பு பரணிதீபம் வைக்கப்பட்டது.
இதையடுத்து தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட செம்பால் ஆன மகாதீப கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி, 3500 கிலோ நெய் ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளிப்பார். அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் காட்சி தரும். இன்று ஏற்றப்படும் மகாதீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலையில் பிரகாசிக்கும். மகாதீப தரிசனத்தை காண நேற்று முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
எங்கு பார்த்தாலும் திருவண்ணாமலையில் பக்தர்களே காணப்படுகிறார்கள். தீபத்திருவிழாவை கொண்டாட திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரில் 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 2615 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 6 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தீபம் ஏற்றும் மலையில் மீட்பு பணி மற்றும் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
வழக்கம்போல் இந்த ஆண்டும் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது. பக்தர்கள் பாஸ் வைத்திருந்தும் பரணி தீபத்தை தரிசிக்க முடியவில்ைல. கோயிலின் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரம் அருகே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பரணி தீபத்தை தரிசிக்க கோயிலினுள் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களை விட போலீசாரே கோயிலுனுள் அதிகளவில் காணப்பட்டனர்.
இறைவன் ஒருவனே
பஞ்சபூதங்களை அரசாளும் ஏகனாக இருக்கும் இறைவன் ஒருவனே அனேகனாகி (பஞ்ச மூர்த்திகளாகி) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.