நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை
12/10/2025 4:33:21 PM
சென்னை: நாசிக்கில் இருந்து வெங்காயம் வாங்கியதில் ரூ.8 லட்சத்தை பிரபல துணிக்கடை அதிபரிடம் இருந்த பெற்று தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாடுமுழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை கடைகளில் விற்பனை ெசய்யப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை அதிபர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் மொத்தமாக நாசிக்கில் இருந்து வெங்காயத்தை வாங்கி சில்லறையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையில், தி.நகரில் ரெங்கநாதன் தெருவில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் தனது கடைக்கு கடந்த வாரம் மும்பை அருகே உள்ள நாசிக்கில் இருந்து சென்னை முழுவதும் உள்ள நிறுவன கிளைகளுக்கு ரூ.8 லட்சத்திற்கு பெல்லாரி வெங்காயம் கொள்முதல் செய்தார்.
பொதுவாக கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்திற்கான பணத்தை லாரி டிரைவர்களிடம் கொடுப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரம் நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்த வெங்காயத்திற்கு ரூ.8 லட்சம் பணத்தை பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் கிருஷ்ணகிரியை ேசர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் இந்த பணத்தை நாசிக்கில் உள்ள வியாபாரியிடம் லாரி டிரைவர் பிரகாஷ் கொடுக்காமல் தனது வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
கொள்முதல் செய்த வெங்காயத்திற்கான பணத்தை நாசிக் வியாபாரிகள் துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கத்திடம் போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு லாரி டிரைவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார். அதன் பிறகு தான் லாரி டிரைவர் ரூ.8 லட்சம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் ரூ.8 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக லாரி டிரைவர் பிரகாஷ் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.