வாலிபரை அடித்து உதைத்து பணம், செல்போன் பறிப்பு: 2 பேர் கைது
12/10/2025 4:31:49 PM
தண்டையார்பேட்டை: புளியந்தோப்பில் வாலிபரை அடித்துஉதைத்து பணம், செல்போன் பறித்த 2 பேரை கைது செய்தனர்.சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம், கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் ஜீவா (34). இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது வழியில் குடிபோதையில் இருந்த 2 பேர், ஜீவாவை மடக்கி அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2000 ரூபாயை பறித்து சென்றனர்.
இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் வந்து, காயம் அடைந்த ஜீவாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின்படி, புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து கன்னிகாபுரம் தாஸ்நகரை சேர்ந்த குட்டி (எ) ஸ்டான்லி (46), கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்த அப்புன்ராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.