காவல் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் கைது; போக்சோ பாய்ந்தது
12/10/2025 3:57:55 PM
தண்டையார்பேட்டை: காவல்நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனை அங்கப்பன்நாயக்கன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர் மலர் (30). திருமணமான இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதி பிளாட்பாரத்தில் வசிப்பவர் அருள் (25). இவரும் குப்பை பொறுக்கிவந்தார்.நேற்று முன்தினம் இரவு பிளாட்பாரத்தில் மலர் தூங்கினார். நேற்று அதிகாலை மதுபோதையில் அங்கு வந்த அருள், மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
திடீரென எழுந்த அவர் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து அருளை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அருளை கைது செய்தனர். இதன்பிறகு காவல்நிலையத்தில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அருள், கைவிலங்குடன் தப்பினார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில், இன்று அருள் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மலரின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போக்சோ சட்டத்தில் அருள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.