இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நூலிழையில் பறிபோன வெற்றி: சென்னை அணியின் கனவு கலைந்தது
12/10/2025 3:39:36 PM
ஜாம்ஷெட்பூர்: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் சென்னை அணியின் நெரிஜுஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னையின் எஃப்சி அணி முதல் பாதி, ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாம்ஷெட்பூர், ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கோலடித்து சென்னை அணியின் வெற்றிக் கனவை கலைத்தது.
இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி சென்னையின் எஃப்சி அணியுடன் ஆட்டத்தைப் பகிர்ந்து கொண்டது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒரு வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. இன்று ஓய்வு நாளாகும். புனேயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.