காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்
12/5/2025 3:40:16 PM
ராமேஸ்வரம்: தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தெற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி அனுமதி டோக்கன் இன்று வழங்கப்படவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 800 விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று காலை பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். படகுகளில் அதிகபட்சமாக 100 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.