வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி
12/5/2025 3:37:50 PM
சென்னை: வீட்டை சுத்தம் செய்யும் போது ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார். போதிய மருந்து இல்லாததே பெண் இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை கே.கே.நகர் கண்ணிகாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பழனி(39). மனைவி சுமித்ரா(35) மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் கன மழை செய்து வருகிறது. இதனால் வீடுமுழுவதும் சகதியாக இருந்ததால் அதை சுத்தம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சுத்தம் செய்துள்ளார்.
அப்போது வீட்டின் கழிவறை அருகே இருந்த ஷூவை எடுத்து வைக்கும் போது, அதில் இருந்த நச்சு பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்தது. இதில் வலி தாங்க முடியாமல் பயத்தில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அவரது கணவர் பழனி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சுமித்ராவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். நச்சு பாம்பு என்பதால் உடல் முழுவதும் விஷம் பரவியதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களின் பரிந்துரைப்படி உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடிக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து இல்லாததே பெண் இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.