சிறுமியை தகாத வார்த்தையால் பேசிய விவகாரம் புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் 8 பேருக்கு சரமாரி கத்தி வெட்டு
12/5/2025 3:35:40 PM
பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர் (34). இவரது 13 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (45) என்பவர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த, சங்கர் தட்டி கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில், கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர்களான குமார், மஸ்தான், ரஜினி, நந்தகுமார், சஞ்சய், ஆளி ஆகியோர் சங்கரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் சங்கரின் தோள் பட்டை, தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், சங்கரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் சங்கர் தரப்பினர், கமலக்கண்ணன், ரஜினி (40) ஆகியோரை கத்தியால் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணன், சஞ்சய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.