நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்
12/5/2025 3:24:58 PM
நாமக்கல்: நாமக்கல் அருகே முட்புதரில் வீசப்பட்ட 35 கள்ளதுப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சிலர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்து கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக எஸ்பி அருளரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாழவந்திநாடு போலீசார், கொல்லிமலை முழுவதும் அவ்வப்போது சோதனை நடத்தி உரிமம் இல்லாத கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து அதை வைத்திருப்பவர்களை கைது செய்து வந்தனர்.
இதற்கிடையே, கொல்லிமலையில் அதிகளவில் உரிமம் இல்லாத கள்ள துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டால், அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. மேலும், கைது செய்வதில் இருந்து தப்பித்து விடலாம். போலீசார் கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அருளரசு எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், கொல்லிமலை அரியூர் சோளக்காடு, பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோளக்காடு சுடுகாடு அருகில் உள்ள முட்புதரில் உரிமம் இல்லாத 35 கள்ள துப்பாக்கிகளை மர்ம நபர்கள், போலீசாருக்கு பயந்து வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, வாழவந்தி நாடு போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.