அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு
10/10/2025 3:24:13 PM
பொன்னேரி: அதிமுக அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்கு வசதியாக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கத்தில் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கை ஒட்டி மழைநீர் செல்லக்கூடிய ஓடைக்கால்வாய் உள்ளது. திருவேங்கடபுரம், தடப்பெரும்பாக்கம் மற்றும் உப்பரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் இந்த கால்வாய் வழியாகத்தான் வெளியேற்றப்படுகிறது. இந்தநிலையில் கால்வாயில் சுமார் 150 மீட்டருக்கு ஆக்கிரமித்து காங்கிரீட் தளம் போட்டு மூடும் பணிகள் நடைபெற்றது. இதுபற்றி மக்கள் விசாரித்தபோது, ‘’இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டி அதற்கான வாகனங்கள் செல்வதற்கு வசதியாக ஓடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்’’ என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கிராம மக்களே சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டனிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். அப்போது பொதுமக்கள், ‘’பல ஆண்டுகளாக வசித்துவரும் மக்களின் வீடுகளை இடித்துவிடுகின்றனர். ஆனால் அமைச்சர் ஆக்கிரமிப்பு செய்தால் கண்டுகொள்வது கிடையாது’ என்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பொதுமக்களை வட்டாட்சியர்சமாதானப்படுத்தினார். ‘’பணிகளை நிறுத்துவதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். இதையடுத்து ஓடைக்கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த மண் திட்டுக்களை கிராம மக்கள், மண்வெட்டி மூலம் வெட்டி அகற்றினர். இதனிடையே, ‘’மழைநீர் செல்லக்கூடிய ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். ஓடைக்கால்வாயை ஆக்கிரமித்துள்ள அமைச்சருக்கு எதிராக மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.