பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி
10/10/2025 3:04:50 PM
பல்லாவரம்: பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை குன்றத்தூர், நீலாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (24). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் நேற்று காலை பைக்கில் வேலைக்கு சென்றார். பம்மல் பிரதான சாலை, முத்தமிழ் நகர் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு சொகுசு கார் வழியெங்கும் லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை இடித்து தள்ளியபடி வேகமாக வந்தது. அது, பாலமுருகனின் பைக்மீது மோதி நின்றது. இதில் பாலமுருகன் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாஸ்கருக்கு தர்ம அடி கொடுத்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து பாஸ்கரை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில், ‘’ஓட்டுநர் உரிமம் பெறாமல் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்தில் ஒரு சொகுசு கார், லாரி, ஆட்டோ மற்றும் ஒரு ஸ்கூட்டர் சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.