பால் விலை உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்பு கட்டணம் கடும் உயர்வு; தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு
10/5/2025 2:44:46 PM
சென்னை-பால் விலை உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் புதிய தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று, தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின்சார வாரியம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய புதிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்காக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் சார்பாக மனுவும் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அறிவிப்புகள் வெளியிட்டு, கடந்த 25ம் தேதி சென்னை தி.நகரில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பொதுமக்கள், விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் ஓய்வு பெற்ற மின்வாரியத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது கருத்துகளையும் எடுத்து கூறினர். இதனை கேட்ட, மின்வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவுகளை அறிவிப்பதாக கூறி, மனுக்களை பெற்றுக்கொண்டு சென்றனர். இந்தநிலையில் புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:எல்.டி சர்வீஸ்(தாழ்வு அழுத்த மின் இணைப்பு) விட்டிற்கு சிங்கிள் பேஸ் இணைப்பு பெறுவதற்கு ரூ.250 செலுத்தப்பட்டு வந்தது, தற்போது ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 பேஸ் இணைப்புக்கு ரூ.500 கட்டணம் வசூலித்து வந்தனர். தற்போது ரூ.750 முதல் 1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொது குடிநீர் இணைப்பு, பொது பயண்பாட்டுக்கான விளக்குகளுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது, தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் 3 பேஸ் இணைப்பு பெற கட்டணம் ரூ.500 ஆக இருந்தது, இது தற்போது ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் வழிபாட்டு தளங்கள், கைத்தறி தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கான புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மீட்டர் போர்டு, எல்டிசிடி பாக்ஸ், ஹெச்டி பாக்ஸ் மாற்றம் செய்வதற்கான கட்டணம் என பல்வேறு விதமான கட்டணங்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே பஸ் கட்டணம், பால் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
ஜிஎஸ்டியால் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு, பல நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. கைத்தறி தொழில் முழுமையாக முடங்கியுள்ளன. தற்போது மின் இணைப்பு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:புதிய இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, மின்வாரியம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும். கட்டண உயர்வால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கருத்துக்கேட்பு கூட்டம் பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்பட்டது. சிறு, குறு தொழில் செய்து வருவோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.