‘பாபர் அசாமின் பெஸ்ட் இன்னிங்ஸ்’: சர்பராஸ் புகழாரம்
6/27/2019 4:03:41 PM
பர்மிங்காம்: ‘‘பாபர் அசாமின் பெஸ்ட் இன்னிங்ஸ் இது’’ என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐசிசி உலக கோப்பை தொடரில் பர்மிங்காமில் நேற்று நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 41 ரன் எடுத்தார். நியூசிலாந்து 26.2 ஓவரில் 83 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்து தடுமாறிய போது, நீஷம் - கிராண்ட்ஹோம் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடி 132 ரன் சேர்த்தது. உலக கோப்பை போட்டிகளில் 6வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது. கிராண்ட்ஹோம் 64 ரன், நீஷம் 97 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ெசாற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3, அமீர், ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
238 ரன் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 49.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வென்றது. பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார். ஹாரிஸ் சோஹைல் 68 ரன், ஹபீஸ் 32 ரன் எடுத்தனர். பாபர் ஆட்ட நாயகனாக தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில், ‘‘ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. பீல்டிங் முக்கியமானது. பயிற்சியில் கடினமாக ஈடுபட்டாலும், இந்த ஆட்டம் வரை எங்களது பீல்டிங் சொதப்பலாக இருந்தது. பாகிஸ்தான் அணி ஓரங்கட்டப்படும் போதெல்லாம், வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி. அமீர், ஷாஹீன், சதாப் சிறப்பாக பந்து வீசினர். பாபர், ஹாரீஸ் நன்றாக பேட்டிங் செய்தனர். என்னை பொறுத்தவரை, பாபர் அசாமின் பெஸ்ட் இன்னிங்ஸ் இது. நியூசிலாந்து பவுலர்கள் கொடுத்த அழுத்தத்தை எதிர்கொண்டு அவர் மிகச்சிறப்பாக ஆடினார். நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. அடுத்து வரும் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்’’ என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் பவுலர்கள் நெருக்கடி தந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய போது, ஆட்டத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் பாபர், ஹாரீஸ் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது’’ என்றார். ஆட்ட நாயகன் பாபர் கூறுகையில், ‘‘கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வென்றோம். திட்டமிட்டபடி கடைசி ஓவர் வரை நின்று ஆடினோம்’’ என்று தெரிவித்தார்.